இளஞ்செழியனை குறிவைத்தவர் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள்: வெளியான பகீர் தகவல்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்ததாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகமொன்று கடந்த மாதம் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

elam

இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்ததுடன், ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்வம் நடைபெறும் தினத்திற்கு முதல் நாள் அதாவது 21ஆம் திகதி இரவு, பிரதான சந்தேக நபராக பொலிஸாரிடம் சரணடைந்த சிவ­ராசா ஜெயந்­த­னுடைய நல்லூரிலுள்ள வீட்டிற்கு இனம்தெரியாதவர்கள் நால்வர் சென்றுள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பிரதான சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சிவராசா ஜெயந்தனது வீட்டினை அவர்கள் சரியாக அடையாளம் காண முடியாமல் அயல் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஜெயந்தனது வீட்டிற்கு சென்று அவருடன் ஒன்றரை மணித்தியாலம் வரையில் உரையாடியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அரைகுறை தமிழில் உரையாடியதாகவும், கறுப்பு நிற வாகனமொன்றில் வந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஜெயந்தனை தேடிச் சென்றவர்களை அடையாளம் காட்டுகின்றனர்.

மேலும் அவர்கள் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடரந்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சமூகவியலாளர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரது துப்பாக்கியை பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபர் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இருந்து நூதன முறையில் துப்பாக்கியை திருடியுள்ளதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

அவரின் இந்த செயற்பாடு தற்பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் துப்பாக்கியொன்றை கொண்டு வந்திருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பலரும் கூறுகின்றனர்.

பிரதான சந்தேகநபராக பொலிஸாரிடம் சரணடைந்துள்ள சிவராசா ஜெயந்தனை இனந்தெரியாத நபர்கள் சந்தித்துள்ளமையானது, குறித்த துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றர்.

அத்துடன், இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த துப்பாக்கி பிரயோகமானது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என கூறியதும் மற்றும் சுடச்சொன்னார் சுட்டேன் என பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளமையும் சோடிக்கப்பட்ட நாடகமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது பிரபல புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.