கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கு அணியினால் மேற்கொள்ளப்பட்ட தவறான கணக்கீடுகளே காரணம் என அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற குறித்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், சூதாட்டம் இடம்பெற்றதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் பலதரப்பிலும் இவ் விவகாரம் காரசாரமாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ் விவகாரம் குறித்து முதல்முறையாக முரளிதரன் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியா அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு அணியினால் மேற்கொள்ளப்பட்ட தவறான கணக்கீடுகள் காரணம்.
இதனுடன் இலங்கை அணி இரண்டாவதாக துடுப்பாடியிருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்க கூடிய வாய்ப்பு இருந்தது” என கூறினார்.
மும்பையில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைதொடர்ந்து 275 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக டோனி தெரிவுசெய்யப்பட்டார்.