எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைத்து விட முடியாது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததும், தற்போதைய அரசாங்கத்தினதும், சிறிலங்கா அதிபரினதும் அதிகாரம் முடிந்து போய் விடும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே சிறிலங்கா அதிபர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
”நாடாளுமன்ற ஆசனங்களை மாற்றி புதிய அரசாங்கத்தை அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று சில குழுக்கள் கனவு காண்கின்றன.
ஆனாலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எனது ஆசி மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி எனது ஆசி இல்லாமல் எவராலும் ஆட்சியை அமைத்து விட முடியாது.
தற்போதைய அரசாங்கம் எல்லா தடைகளையும் தாண்டி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. வெற்றுக் கோசங்களை எழுப்புகின்ற சிலர் தான் குழப்பம் விளைவிக்கின்றனர்.
சில ஊடகங்கள் நாட்டுக்கு உண்மையான உணர்வுடன் பணியாற்றுபவர்களுக்கு இடம் அளிப்பதில்லை. ஆனால் வெற்றுக் கோசம் எழுப்புகிறவர்களுக்கு இடம்கொடுக்கின்றன.
இதனால் அரசாங்கம் தொடர்பான தவறான புரிதல்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






