சினிமாவில் பெண்கள் என்றதுமே சதைக்குத் தான் முதலிடம் கொடுப்பார்கள். சினிமாவின் சூட்சுமங்களைப் புரிந்து கொண்ட நடிகைகளும் தாராள மனதுடன் நடித்து வருவதுண்டு. ஆனால், கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
கவர்ச்சியில் ஒரு கலக்குக் கலக்கிய நயந்தாரா, த்ரிஷா எல்லோரும் இப்பொழுது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்கள். பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களுடன் கதைகளை வைத்துள்ள இயக்குனர்களும் அவர்களைத் தேடிப்போகின்றார்கள். நடிகைகளில் நட்சத்திர அந்தஸ்தை வைத்து தயாரிப்பாளர்களும் அதற்கு முன்னுரிமை கொடுத்து படமாக்குகின்றார்கள்.
ஜோதிகா, த்ரிஷா, நயந்தாரா வரிசையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். சிறிய வேடமானாலும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றார். அவ்வாறு நடித்ததே ‘விக்ரம் வேதா’.
இந்நிலையில், தற்போது ‘சென்னையில் ஒரு நாள் 2′ படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார். இப்படம் கதாநாயகியை மையப்படுத்தியது என்பதால், வரலட்சுமிக்கு திருப்புமுனையாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.