குற்றம் செய்யும் அரச அதிகாரிகள் குறித்து வடமாகாண ஆளுனர் கூறியுள்ள விடயம்

வடக்கு அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுமே அல்லாமல் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, வடமாகாணத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் மீது யாராவது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைத்தால் ஆளுநர் என்ற நீதியில் ஒழுக்கற்று விசாரணை மேற்கொள்ளப்படும்.

விசாரணை ஒன்றின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது, தண்டனை அல்லது சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படும்.

அரச உத்தியோகத்தர்கள் சேவையின் நிமிர்த்தம் இடமாற்றத்திற்கு உரித்துடையவர்கள், அவர்களின் இடமாற்றம், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் விசேட சேவை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்.

மாகாண இடமாற்றங்கள் நியமனங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுமே அல்லாமல் ஒழுக்காற்று விசாரணையால் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாது.

ஆளுநரால் மேற்கொள்ளப்படும் அதி விசேட சிறப்பு தர அதிகாரிகளின் நியமனத்தை ஆளுநரால் திரும்ப பெற முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.