யாழில் வீதியால் சென்ற தம்பதிகளிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த தம்பதியிடம் தாலிக் கொடி, சங்கிலி என 15 தங்கப் பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அன்றையதினமே கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை

வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்து திரும்பிய போதே சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் நாவற்குழியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.