பாகிஸ்தான் மீது கண்டனம் வெளியிட்டுள்ள சீனா

பாகிஸ்தானின் மூத்த முப்படை ராணுவக் குழு கடந்த 9ந் தேதி முதல் 12ந்தேதி வரை சீனாவுக்குச் சென்று சீன ராணுவம் மற்றும் பிற அரசுத் துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் பல்வேறு விவகாரங்கள் குறிதது விவாதம் நடத்தியது.

இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா சீன ராணுவ ஜெனரல் ஜாங் யூக்ஸிங்-ஐ சந்தித்து சர்வதேச மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களில் பணிபுரியும் தங்கள் நாட்டு மக்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சீன அரசு பாகிஸ்தான் ராணுவ தளபதியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலூச் கிளர்ச்சியாளர்கள் சீனாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களான எரிவாயுக் குழாய்கள் மற்றும் மின்சாரக் கோபுரங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து குறிவைத்து வருவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து சீன மக்கள் தாக்கப்படுவதை தடுக்க தேவையான பணியாளர்கள் மற்றும் தளவாடங்களுடன் மத்திய காவல் அலுவலகத்தில் வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரிவை அமைக்க இஸ்லாமாபாத் காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.