மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்!

திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மணமகன் மடியில் மயங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

களைகட்டிய திருமணம்

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ் மற்றும்அனுராதா தம்பதிகள். இவர்களது மகள் சுஜானா (22)விற்கு, சிவாஜி என்ற 25 வயது இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை திருமண மண்டபத்தில் ஆடல், பாடல் என திருமண நிகழ்வு களைகட்டியுள்ளது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

மணமேடையில் மயங்கி விழுந்த மணமகள்

திருமண நாள் அன்று இரவு 10 மணிக்கு முகூர்த்த நேரம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், மணமக்கள் மேடையில் பட்டு வேஷ்டி, சேலையுடன் அமர்ந்திருக்க ஐயர், மந்திரம் கூறியுள்ளார்.

அப்போது மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவதற்கு முன்பாக சீரகம் கலந்த வெல்லத்தை மணமகன் மணமகளின் தலையில் வைப்பது ஐதீகம். அதன்படி சீரகம் கலந்த வெல்லத்தை மணமகள் சுஜானா தலையில் மணமகன் வைத்தார். அப்போது மணமகள் திடீரென மணமேடையில் மயங்கி சரிந்து மணமகன் மடியிலேயே விழுந்தார்.

இதனைக்கண்ட மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மணமகளை மீட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

உயிரிழந்த மணமகள்

மருத்துவமனையில் மணமகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியநிலையில், உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தகவல் அறிந்த பொலிசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது மணமகளின் பையில் விஷத்தன்மை கொண்ட காய்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த திருமணத்தில் பெண்ணிற்கு சம்மதம் இல்லையா? அல்லது காதல் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலையா? என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் பெண்ணின் உடம்பிற்குள் சென்ற விஷமே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.