அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் பட்ஸ் ப்ரோ அறிமுகம் – கூகுள் அசத்தல்!

கூகுள் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான பிக்சல் பட்ஸ் ப்ரோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் நிறுவனம் ஒருவழியாக புது பிக்சல் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் விலை 199 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. விற்பனை ஜூலை மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ கூகுள் நிறுவனத்தின் புதிய ஆடியோ சாதனம் ஆகும். இதில் 11mm ஸ்பீக்கர் டிரைவர், ANC வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 6-கோர் ஆடியோ சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூகுள் உருவாக்கிய அல்காரிதம்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன. மேலும் இதன் ஆடியோ அனுபவத்தை கூகுள் நிறுவனத்தின் பிரத்யேக ஆடியோ குழு உருவாக்கி இருக்கிறது.

தலைசிறந்த ANC அனுபவத்தை வழங்கும் நோக்கில் நியூரல் பிராசஸிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெளிப்புற சத்தத்தை மிக குறைந்த லேடன்சியிலும் கண்டறியும். பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலில் டிரான்ஸ்பேரன்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது வெளிப்புற சத்தத்தை பயனர் விருப்பப்படி கேட்க வழி செய்யும்.

அமெரிக்காவில் புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 21 ஆம் தேதி துவங்குகிறது. கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல்: கோரல், ஃபாக், சார்கோல் மற்றும் லெமன்கிராஸ் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.