சமையல் எரிவாயு விலை ரூ.50 வால் அதிகரிப்பு!

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்பவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வருவாய் இழப்புக்கு ஏற்ப அதை சரிக்கட்டும் வகையில் விலை உயர்வை அறிவிக்கின்றன.

அந்த வகையில் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனையாகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை 250 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 2,355 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்து விட்டன. ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன.

இந்த நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்று திடீரென வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளன. சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இந்த விலை உயர்வு இன்றே அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் சிலிண்டர் விலை ஆயிரத்தை கடந்து உள்ளது. இனி ஒரு சிலிண்டர் சமையல் கியாசுக்கு பொதுமக்கள் 1,015 ரூபாய் கொடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் மானியம் பெறுவது குறைந்து கொண்டே இருக்கிறது. சிலிண்டருக்கு 25 ரூபாய் கூட யாருக்கும் மானியம் கிடைப்பது இல்லை. ஆனால் சிலிண்டர் விலை மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். சாதாரண ஏழை-எளிய மக்களை இந்த விலை உயர்வு மிக கடுமையாக பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது சமையல் கியாஸ் விலை உயர்வதால் இது தங்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

கடந்த 10 மாதங்களில் 6 தடவை சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்தது. ஜூலை மாதம் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டதால் ஒரு சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்ந்தது.

ஆகஸ்டு மாதம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.875 ஆகவும், செப்டம்பர் மாதம் 25 ரூபாய் அதிகரித்து ரூ.900 ஆகவும் சிலிண்டர் விலை இருந்தது. அக்டோபர் மாதம் 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.915 ஆக உயர்ந்தது.

நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி , மார்ச் மாதங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. ஏப்ரல் மாதம் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.965 ஆக உயர்ந்தது.

கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை வரலாற் றில் முதல் முறையாக ஆயிரம் ரூபாயை கடந்து இருக்கிறது.

இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.