1 ஸ்மார்ட்போன், 2 ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் நிறுவனம்

இந்த சாதனங்களின் அறிமுக நிகழ்ச்சி நேரலையாக இரவு 7 மணிக்கு ஒன்பிளஸ் இந்தியா யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும்.

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று ஒன்பிளஸ் நார்ட் சி.இ 2 ஸ்மார்ட்போன் மற்றும் 2 ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து வெளியான தகவலின் படி நார்ட் சி.இ. 2 ஸ்மார்ட்போனில் 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி சப்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் இந்த போனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே ஒரு நாள் முழுவதும் பயன் பெறலாம்.

மேலும் இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC, 6.43 இன்ச் ஃபுல் ஹெச்.டி மற்றும் AMOLED டிஸ்ப்ளே, பின் பக்கத்தில் 64 மெகாபிக்ஸல் கொண்ட மூன்று கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா, 3.5mm ஹெட்போன் ஜாக், 6ஜிபி மற்றும் 8ஜிபி கொண்ட ரேம் வேரியண்டுக்கள், 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரே மிரர் கலரில் வரும் இந்த போனின் 6ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.23,999-ஆகவும், 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.25,999-ஆகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் Y1S மற்றும் Y1S Edge என்ற இரண்டு டிவிக்களையும் இன்று அறிமுகம் செய்கிறது. 32 இன்ச் மற்றும் 43 இன்ச்களில் வெளியாகும் இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தில் இயங்கும் எனவும், இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ள ‘ஒன்பிளஸ் கனெக்டிவிட்டி’ மூலம் பிற ஒன்பிளஸ் சாதனங்களுடன் இணைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சாதனங்களின் அறிமுக நிகழ்ச்சி, நேரலையாக இன்று இரவு 7 மணிக்கு ஒன்பிளஸ் இந்தியா யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும்.