கனடாவில் கைதான பிரெஞ்சு ஆசிரியர்!

கனடாவில் நார்த் யோர்க் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பல மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய நபர் ரொறன்ரோ மாவட்ட பள்ளி வாரியத்தால் பணியமர்த்தப்பட்டவர் எனவும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரெஞ்சு ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தொடர்புடைய சம்பவம் கடந்த ஆண்டு செம்படம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பல்வேறு தருணங்களில் பல மாணவர்களிடம் நடந்துள்ளதாக பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

நீண்ட ஒருமாத கால விசாரணைக்கு பின்னர் ரொறன்ரோவை சேர்ந்த 26 வயது நாதன் கிரஹாம் என்பவர் ஜனவரி 12ம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது மொத்தம் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான ஆசிரியர் ஸ்கார்பரோவில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டிர்லிங் அரசு பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதால், இரண்டு பள்ளிகளில் தொடர்புடைய பெற்றோர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் மார்ச் 16 அன்று தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ரொறன்ரோ வடக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளார்.