அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களில் மோந்துண்டு பலியாகும் உயிரினங்கள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் மோதுண்டும், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாகவும் பறவைகள் உட்பட பல்வேறு விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக சுற்றுச் சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த காலம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மயில்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைகளில் சில வன விலங்குகளுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது ஒப்புக்கொள்வதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன சூரிய பண்டார (Chandana Sooriya Bandara) தெரிவித்துள்ளார்.

இதனை கவனத்தில் கொண்டே பறவைகள் உட்பட விலங்குகள் விரும்பும் மரம், செடி கொடிகளை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு இரு புறங்களில் இருக்கும் இடங்களில் பயிரிட வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் விலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது பெருமளவில் குறைந்துள்ளன.

வன விலங்குகளை கவரும் மரங்கள், செடி கொடிகள் பயிரிடப்படுவதை தடுக்க அதிவேக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பாக மயில்கள் அதிகளவில் காணப்படும் இடங்களில் வீதிகளில் அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் மோதுண்டு கொல்லப்பட்ட விலங்குகளின் உடல்கள் சாலைக்குள் வெளியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.