பெண்ணொருவருக்கு எமனாக மாறிய நரி… வெளியான தகவல்

பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை, வெதகொடலந்த பிரதேசத்தில் சிறிய குடிசையில் வசித்து வந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுமார் 45 நாட்களுக்கு முன்னர், நள்ளிரவில், குடிசைக்குள் புகுந்த நரி, உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கால்களின் குதிகால் பகுதியைக் கடித்து சென்றுள்ளது. எனினும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என வைத்தியர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி அவருக்கு வெறிநோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், அவரது இரு மகன்களும் அவரை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மறுநாள் அவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, பேருவளை வளதர வெதகொட பிரதேசத்தில் நரி, நாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் வளர்ப்பு நாய்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்.