பெரியார் சிலையை அவமதித்த இருவர் கைது!

கோவையில் பெரியார் சிலையை அவமதித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூர் தண்ணீர் தொட்டி பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பு பெரியாரின் முழு உருவ சிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கின் போது மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் காவி பொடியை வீசி அவமதித்து இருந்தனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் உருவத்தை வைத்து போலீசார் தேடி வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இந்து அமைப்பு ஆதரவாளர்கள் 2 பேர் தலைமறைவாக இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (26) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் (28) என்பதும், இந்து அமைப்பு ஆதரவாளர்களான இவர்கள் பெரியார் சிலையை அவமதித்ததையும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.