இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கம்! ரஞ்சித் மத்துமபண்டார..

அரசாங்கம் இராணுவ ஆட்சி நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் நாடாளுமன்றை மூடி இராணுவ ஆட்சி நோக்கி நகர்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு மக்களுக்காக பேசக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டுள்ளது நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

பொருட்கள் இல்லை. பால்மா, சீனி, எரிவாயு, மண்ணெண்ணை என பலவற்றுக்கும் வரிசையில்காத்திருக்க நேரிட்டுள்ளது. அரிசியின் விலை வானளவு உயர்ந்துள்ளது, மரக்கறிகள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவற்றை பேசுவதற்கு நாடாளுமன்றை கூட்ட வேண்டும். நாடாளுமன்றை ஒத்தி வைத்து திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணம் மேலும் மேலும் அச்சிடப்படுகின்றது.

ஜனாதிபதி நாடாளுமன்றை உடனடியாக கூட்ட வேண்டுமென கோருகின்றோம். நாட்டின் நிதி கட்டுப்பாடு நாடாளுமன்றிற்கே உண்டு. ஊடகங்கள் தங்களது பணியை மேலும் வலுவாக செய்ய வேண்டும்.

25000 ரூபாவினால் பொருட்களின் விலையை உயர்த்த அரசாங்கம் ஐயாயிரம் ரூபாவினை வழங்கி வருகின்றது என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.