எரிவாயுவில் இருந்து விறகு அடுப்புக்களுக்கு மாறும் பிரபல ஹொட்டல்கள்

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து, கொழும்பிலுள்ள சில நட்சத்திர ஹொட்டல்களில் விறகு அடுப்புக்கள் பயன்படுத்தப்படுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துச் செல்லும் நிலையில், பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதுமாத்திரமல்லாது, சில நேரங்களில் காத்திருந்தும் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதுவொருபுறமிருக்க, உணவகங்கள் மற்றும் பிரபல ஹொட்டல்கள், எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள சில ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடிக்கும் என்று எரிவாயு நிறுவனங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிவாயு தட்டுப்பாட்டை அடிப்படையாக வைத்து பல்வேறு பகுதிகளில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் எரிவாயு கொள்கலன்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில பகுதிகளில் எரிவாயு கொள்கலன்கள் கொண்டு செல்லும் வாகனத்தின் சாரதி தாக்கப்பட்டு எரிவாயு கொள்கலன்கள் பலாத்காரமாக பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.