ஆரோக்கியமும் நிறைந்த கருங்கோழி பிரியாணி

அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருளாக பிரியாணி இருக்கின்றது. அதிலும்
கருங்கோழியைக் கொண்டு செய்யப்படும் பிரியாணியானது மிகவும் ஆரோக்கியமானதாகவும், நோய்களைப்போக்கக் கூடியதாகவும் கருதப்படுகின்றது.

கருங்கோழியை உட்கொள்வதால் இரத்த சோகை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், தோல் நிற மாற்றுக் கோளாறுகள் மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கும் நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது.

கருங்கோழியில் அதிகப் புரதம், குறைந்த கொழுப்பு, பதினெட்டு விதமான அமிலோ ஆசிட்டுகள், பி1, பி2, பி6, பி12, சி மற்றும் இ வைட்டமின்களும், நியாசின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தானது அதிக அளவில் இருப்பதால் இவை பலவகை நோய்களைப் போக்கும் ருசியான மருந்தாக கருதப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கருங்கோழியில் பிரியாணி எப்படி செய்வது எனப்பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கிலோ,
எண்ணெய் – 180ml,
பட்டை – 5 கிராம்,
ஏலக்காய் – 5 கிராம்,
இலவங்கம் – 5 கிராம்,
பிரியாணி இலை – 5 கிராம்,
நட்சத்திர ஆனிஸ் – ஒன்று,
கல்பாசி – சிறிதளவு,
வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – ½கிலோ,
பச்சைமிளகாய் – 4, இஞ்சி,
பூண்டு விழுது – ஒரு சிறிய கப்,
புதினா, கொத்தமல்லி, (பொடியாக நறுக்கியது) – 1கப்,
தக்காளி (நறுக்கியது) – 200 கிராம்,
உப்பு, மஞ்சள் தூள்,
மிளாகய்த்தூள் – சுவைக்கேற்ப,
கரம் மசாலாத்தூள் – இரண்டு ஸ்பூன்,
தயிர் – 150ml,
கருங்கோழி – 1கிலோ,
எலுமிச்சை – 1.

செய்முறை:

* அடிகனமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, இலவங்கம், பிரியாணி இலை, கடல்பாசி மற்றும் ஏலக்காயைப் போட்டு வதக்கவும்.

* பின்பு நீளவாக்கியில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் போட்டு நன்கு பொன்நிறமாக சிவக்கும் வரை வதக்கவும்.

* இதற்கிடையில் ஒரு கிலோ பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்பு இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐம்பது சதவீதம் வேகவைத்து வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பொன்நிறமாக வெங்காயம் சிவந்து வரும் பொழுது அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

* இத்துடன் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி இலைகளில் பாதிஅளவைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.

* இப்பொழுது நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி மற்றும் உப்பை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கும் பொழுது ஊற்றிய எண்ணெயானது பிரிந்து வருவதை பார்க்க முடியும்.

* இந்த சமயத்தில் தயிரைச் சேர்த்து அதன் பின் வெட்டிவைத்துள்ள கோழி துண்டுகளையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

* மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சூடாக வைத்துக்கொள்ளவும்.

* இப்பொழுது கறி முக்கால் பாகம் வெந்தபிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதாவது பாஸ்மதி அரிசிக்கு ஏற்றாற் போல் ஊற்றி பாதி அளவு வெந்த பாஸ்மதி அரிசியைப் போட்டு அரிசி உடையாதவாறு லேசாக கிளறிக் கலக்கவும்.

* தண்ணீரும், அரிசியும் கொதித்து சமஅளவில் வரும் பொழுது பாத்திரத்தைத் தட்டு போட்டு மூடி அதன் மேல் அந்த சுடு தண்ணீர் பாத்திரத்தையும் தூக்கி வைத்து விட வேண்டும்.

* இருபது நிமிடங்கள் இது போன்று தம்மில் வைக்கப்படும் பிரியாணி சரியாக வெந்து தனித்தனியாக கடைகளில் விற்கும் பிரியாணி பதத்திற்கு வந்து விடும்.

* இன்னும் தண்ணீர் தேவைப்பட்டால் மேலே தம் வைத்திருக்கும் சுடு தண்ணீரிலிருந்து சிறிது ஊற்றிக் கொள்ளலாம்.

* பிரியாணி தயாராகி முடிந்தவுடன் பிரியாணி பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி மிகவும் லாவகமாக கிளறவும். பின்பு மீதமுள்ள நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை பிரியாணியின் மேல் தூவவும்.

* பிரியாணியில் காரம் அதிகமாக இருந்தாலோ அல்லது புளிப்பு சுவை குறைவாக இருந்தாலோ எலுமிச்சை சாறைப் பிழிந்து கொள்ளவும்.

* இந்த கருங்கோழி பிரியாணியுடன் தயிர் பச்சடி மற்றும் கத்திரிக்காய் குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது அதன் சுவையே அலாதியாக இருக்கும்.

* கோழி மிளகு வறுவல் மற்றும் சிக்கன் 65 போன்றவற்றுடன் கருங்கோழி பிரியாணியைச் சாப்பிடும் பொழுது எப்படி இருக்கும்? என்று நான் கேட்கத் தேவையில்லை. அப்படி ஒரு அற்புதமான சுவையுடன் இருக்கும்.