தமிழ் நாட்டில் சிறையில் உள்ள இலங்கை பெண் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு!

சென்னை – இராமநாதபுரம் அடிப்படை நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டும் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 வயதுடைய இலங்கைப் பெண்ணை உடனடியாக விடுதலை செய்யுமாறு புழல் மத்திய பெண்கள் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் முள்ளிவளையைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.கஸ்தூரி என்ற பெண் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மனுவின் படி, குறித்த பெண் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு சென்ற நிலையில், ஜூலை 2018 இல் வீசா காலாவதியான பிறகும் இந்தியாவிலேயே தங்கியிருந்து, இந்த ஆண்டு செப்டெம்பரில் அவர் இராமநாதபுரம் கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, திருச்சி இலங்கை சிறப்பு முகாமில் தங்கியிருந்து தினமும் முகாம் பொறுப்பாளரிடம் முன்னிலையாக வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் இராமநாதபுரம் நீதிமன்றம் நவம்பர் 1 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இராமநாதபுரம் நீதிமன்றம் பிணை வழங்கியும் சிறை அதிகாரிகள் தன்னை விடுவிக்கவில்லை என்று கூறி குறித்த பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் நீதிபதி சுவாமிநாதன், மனுதாரரை உடனடியாக விடுவிக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.