கனடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதறும் குடும்பங்கள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெருவெள்ளத்தில் குடியிருப்பு உட்பட மொத்தத்தையும் இழந்துள்ள குடும்பம் ஒன்று அரசிடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Merritt பகுதியில் குடியிருக்கும் பர்கத் கான் என்பவரது குடும்பமே, தற்போது அரசின் உதவியை நாடியுள்ளது.

தங்களுக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், தற்போது பெருவெள்ளத்தில் சிக்கி மொத்த குடியிருப்பும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கண்கலங்கியுள்ளர்.

எதுவும் என்னிடம் மிஞ்சவில்லை, மொத்தமும் வெள்ளத்தில் சென்றுவிட்டது எனக் கூறும் பர்கத் கான், கல்கரியில் இருந்து கடந்த மார்ச் மாதமே தமது இரு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருடன் Merritt பகுதியில் குடியேறியுள்ளார்.

Merritt பகுதியில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள Kamloops நகரில் அமைந்துள்ள உதவி மையத்திலேயே அரசின் உதவியை நாடி சமீப நாட்களாக சென்று வருகிறார்.

ஆனால், அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது. புயல் மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை எனவும், உயிருடன் இருப்பதால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாகவும் பர்கத் கான் தெரிவித்துள்ளார்.

உயிருடன் தான் இருக்கிறோம், ஆனால் மொத்தமும் இழந்து தத்தளிக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களிடம் இருந்து திரட்டிய கொஞ்சம் பணத்தை வைத்து தற்போது ஹொட்டல் ஒன்றில் குடும்பத்துடன் தங்கி வருவதாகவும், ஆனால் எத்தனை நாட்கள் ஹொட்டலில் தங்க முடியும், எப்போதும் நண்பர்கள் உதவ முன்வருவார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகில் மிகவும் கடினமானது உதவி கேட்டு கையேந்துவது தான் என குறிப்பிட்டுள்ள பர்கத் கான், இந்த கடினமான வேளையில், குடும்பத்தை காப்பாற்ற அதையும் செய்தாக வேண்டிய சூழல் என தெரிவித்துள்ளார்.

Merritt பகுதியில் இருந்து சுமார் 2,000 மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு மொத்த நகர மக்களும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.