சவேந்திர சில்வாவுக்கு ரஷ்யாவில் மகத்தான வரவேற்பு!

ரஷ்யாவிற்கு வியஜம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அந்நாட்டு இராணுவத்தினர் மகத்தான வரவேற்று வழங்கியுள்ளனர்.

ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

அங்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சிற்கு ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவுடனான உள்ளக பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது, இருதரப்பு நலன்புரி செயற்பாடுகள், இலங்கை முப்படையினருக்கான பயிற்சி தளங்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல், இராணுவ கூட்டு பயிற்சிகள், இயந்திர மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலான கருத்து பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான நல்லெண்ணம் மற்றும் உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவினால் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு சிறப்பு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா ரஷ்யாவில் தங்கியிருந்த நாட்களில் மாஸ்கோவின் மிகைலோவ்ஸ்கயாவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உயர் ஆயுதக் கட்டளை கல்லூரிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததோடு, கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ் ரஸ்யாவின் 4 ஆவது கார்ட்ஸ் டேங்க படைப்பிரிவின் தளபதி நரோ – போமின்க்ஸ் இராணுவ பீரங்கி கல்வியற் கல்லூரி, இராணுவ மருத்துவ கல்வியற் கல்லூரி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ தளங்களுக்கும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.