சென்னை-கொல்கத்தா யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? வெளியான தகவல் ?

ஐபிஎல் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாயில் துவங்கவுள்ளது. இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து பார்ப்போம். சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில், இரண்டாவது பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருந்து வருகிறது.

6 முறை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது. இதன் காரணமாகவே ஒரு வேளை டோனி டாஸ் ஜெயித்தால் 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை கொடுப்பார்.

அதே சமயம், கடந்த தொடர்களில் இரண்டு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா அணி, இரண்டு முறையுமே கோப்பையை வென்று, இறுதி போட்டியில் தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது.

இறுதி போட்டி நடைபெறும் ஆடுகளம் இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கே சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 9 முறை வெற்றி பெற்றுள்ளன, இரண்டு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளன. எனவே இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்காற்றும் என தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக துபாய் மைதானத்தில் நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் சென்னை அணியே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இந்த புள்ளி விவரங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், அதே சமயம் கிரிக்கெட்டில் என்னவெல்லாம் நடக்கலாம் என்பது எழுதப்படாத விதி என்பது குறிப்பிடத்தக்கது.