வெயில் தரும் ஆரோக்கியம்

நம்நாடு ஒரு வெப்பமண்டல நாடாக இருந்தாலும், சூரிய ஒளியை உடலுக்குள் அனுப்புவதை அடுக்குமாடி வீடுகள் தடுக்கின்றன. 24 மணி நேரமும் குளுகுளு வசதிகளுடன் கூடிய அலுவலகங்களும், மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலும் நம் உடலில் சூரிய ஒளிபடுவதை முற்றிலும் தடை செய்கின்றன.

சூரியஒளியில் நனைந்து அதன் பலன்களை பெற, காலை நேரமாக இருந்தால் 7 மணிக்கு முன்னும், மாலை நேரமாக இருந்தால் 4 மணிக்குப் பின்னாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காலை 7 மணிக்குமேல் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து நம் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி தலைவலி, சோம்பல் போன்றவற்றையும் உண்டாக்கலாம். வெயிலில் காய்வதால் வாத நோய்கள் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம். இதை நிரூபிக்கும் வகையில் உடலில் ஏற்படும் வலியை குறைக்க சூரியக்குளியல் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது மேற்கத்திய ஆய்வு ஒன்று.

தேவையான அளவு சூரியஒளி நம் உடலில் படுவதால், எந்த செலவும் இல்லாமல், நம் உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலுக்கடியில் மறைந்திருக்கும் புரோவைட்டமின்-டி ஆனது, வைட்டமின்-டி ஆக மாற்றப்படுகிறது. இப்படி இயற்கையின் வரப்பிரசாதமாக கிடைத்த வைட்டமின்-டி, எலும்புகளை பலப்படுத்தி, தசைகளை வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியில் உள்ள கொழுப்பு சூரிய ஒளியால் எரிக்கப்படுகிறது. சூரியனால் கிடைத்த வைட்டமின்-டி, உடலில் சேர்ந்த அதீத கொழுப்பை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு சேர்ந்து சூரியனையும் நம்பலாம்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, கருவளையம் போன்ற பிரச்சினைகளை போக்குவதற்கு முகத்தில் நல்எண்ணெயை லேசாகத் தடவிக்கொண்டு தினமும் 5 நிமிடம் சூரிய ஒளி படும்படி செய்து, பின் முகத்தை இளஞ்சூடான நீரில் கழுவிவர, சில நாட்களில் முகம் பளிச்சென ஆகும். நீர்நிலைகளில் இருக்கும் கிருமிகளை, இயற்கையான சூரியஒளி அழிப்பதுபோல, உடலில் உள்ள கிருமிகளையும் சூரிய ஒளி அழித்து உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருத்துவ வளர்ச்சி அவ்வளவாக இல்லாத கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

உடலில் செரடோனின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மனம் சோர்வடைவதை தடுக்கிறது. அத்துடன் ரத்தக் குழாய்களில் நைட்ரிக் ஆக்சைடு வெளிப்படுத்தப்பட்டு, உயர் ரத்தஅழுத்தமும் குறைகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாப்பது மட்டுமன்றி, வேறு சில புற்றுநோய்கள் வராமலும் சூரிய ஒளி தடுக்கிறது. எனவே தினமும் சூரியஒளி படும்படி ஜாலியாக ஒரு நடைபயிற்சி போய் வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் தானாக வரும் என்கிறது, சமீபத்திய ஆராய்ச்சி.