மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை விரட்டுவது எப்படி?

அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் அது பற்றி பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தாமதிக்காமல் தெரியப்படுத்தவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.

கடந்த சில வாரங்களாக, நம் கவனத்திற்கு வரும் தற்கொலை சம்பவங்கள், நம்மை பொறுத்தவரை வேதனை தரும் செய்தி. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இச்செயல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இழப்பு. காலம் முழுவதும் நீங்காத வலியை உண்டாக்கி சென்றிருக்கும், சோக நிகழ்வு. இத்தகைய தற்கொலையை, ஒருவிதமான மனநோய் என்கிறார், பா.சந்திரசேகர். சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மனநலத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றும் இவர், ‘தற்கொலை’ என்ற மனநோய் நமக்குள் எப்படி உருவாகிறது, எப்படி வளர்கிறது என்பதை விளக்குவதோடு, அந்த மனநோயை எப்படி விரட்டலாம், நமக்கு நெருக்கமானவர்களை எப்படி காப்பாற்றலாம் என்பதையும் விரிவாக விளக்குகிறார்.

* தற்கொலை எண்ணம் எப்படி உருவாகிறது? இது மனநோயா?

தற்கொலை எண்ணம் உடல் ரீதியாக, மன ரீதியாக, குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் பொருந்தாத வரையறைகள், அறியாமை, இயல்புக்கு மாறான எதிர்பார்ப்புகள், தவறான கணிப்புகள், எதிர்த்து போராடும் மனவலிமை இல்லாமை இவையே தற்கொலையின் அடிப்படைக் காரணங்கள்.

எடுத்துக்காட்டாக, தேர்ச்சி பெற்றால் மட்டுமே தன்னை மற்றவர்கள் மதிப்பார்கள் என்பது ஒரு மாணவன் தனக்கு தானாகவே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பொருந்தாத வரையறை. மறுமுறை தேர்வெழுதியும் வெற்றி பெறலாம் என்ற அறியாமை. அந்தவகையில் இது ஒரு மனநோயே.

* மனநோய்க்கான அறிகுறிகள் என்ன?

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருப்பதை போல தற்கொலைக்கும் அறிகுறிகள் உண்டு. எப்போதும் சிடு சிடு என இருப்பவர்கள் இயல்புக்கு மாறாக சிரித்து சிரித்து பேசுவதும், எப்பொழுதும் புன்னகையோடு இருப்பவர்கள் திடீரென அமைதியாக இருப்பதும் மிக முக்கிய அறிகுறிகள். மேலும் வெறுத்துப் பேசுவது, தூக்கமின்றி தவிப்பது, தனிமையை விரும்புவது, பிடித்தவற்றை வெறுப்பது, பிரியாவிடை சொல்வது, யாருடனும் கலந்து பேசாமல் மனச் சோர்வாக இருப்பது இவை அனைத்தும் தற்கொலையை தூண்டும் மனநோய்க்கான அறிகுறிகள்.

* தற்கொலை செய்பவரின் மனநிலை எப்படி இருக்கும்?

தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவரின் மன நிலை மூன்று வகைப்படும்.

1. தடுமாறும் மனநிலை

இரண்டினுள் எதை எடுப்பது? எதை விடுவது? செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மனநிலை.

2. உணர்ச்சிப் பெருக்கு மனநிலை

உணர்வுகளை பாதிக்கும் செயல் ஒன்று நிகழும்போது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் மனநிலைதான் இது. தேர்வு முடிவுகள் வெளியான நாளில் தோல்வியுற்ற மாணவனின் உணர்ச்சிப் பெருக்கே அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது.

3. இறுக்க மனநிலை

தான் நினைப்பதற்கு மாறாகவும் நடக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை இதற்குள்ளே அடங்கும். ‘தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவேன்’ என்று உறுதியாக நினைக்கும் மாணவன் 96 மதிப்பெண்கள் வாங்கி சிறப்பாகத் தேர்ச்சியுற்ற பிறகும் தற்கொலை செய்துகொள்வது இவ்வகை.

* தற்கொலை மனநோயில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?

ஒருவரால் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும் என்றால் அம்மனிதனால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். ஆதலால் உணர்ச்சிப் பெருக்கு மனநிலை உடையவர்கள் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனநிலையை சமநிலைப்படுத்தலாம். அத்தோடு நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகளை கேட்பதும், மகிழ்ச்சி தரும் நூல்களை படிப்பதும், பிடித்த இசையை கேட்பதும் என மனதை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான செயல்களில் திசை திருப்பவேண்டும்.

அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் அது பற்றி பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தாமதிக்காமல் தெரியப்படுத்தவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். ‘104’ தொலைபேசி மருத்துவ ஆலோசனையும் பெறலாம்.

* ஆசிரியர்கள் என்ன செய்யலாம்?

‘தேர்வு’, ‘மதிப்பெண்’ மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி, முக்கியமாக பாடங்களோடு வாழ்க்கை திறன் கல்வி, பிரச்சினைகளை கையாளும் திறனை கற்பிக்கவேண்டும். தேர்வுக்கு எப்படி தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, தோல்வியை எப்படி ஏற்றுகொள்வது போன்ற வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அழைத்து உடல்நலம், மனநலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்படவேண்டும்.

* அரசு, எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம்?

அரசு அலுவலகங்கள், காவல் துறை, போக்குவரத்துத்துறை, வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில், மனநலம் படித்தவர்களை ‘மனநல சமூகப்பணி’, ‘மருத்துவ உளவியல்’, ‘மனநல செவிலியர்’ போன்ற பொறுப்புகளில் பணியமர்த்தி, தற்கொலை எண்ணம் முளைவிடும்போதே கிள்ளி எறியலாம்.

மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மனநலம் சார்ந்த படிப்புகளை அனைத்து தனியார் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கலாம்.

ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் தற்கொலை விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
பெற்றோர், நண்பர்கள் செய்ய வேண்டியவை?

தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் கவனமாகப் பேச வேண்டும். பொறுப்பில்லாமல் பேசும் சில வார்த்தைகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடும். தற்கொலை மனநோய் அறிகுறிகள் தென்படுபவர்களிடம், அதிக நேரம் பேசுங்கள். அவர்களை சிறிது நேரம் கூட தனிமையில் விடாதீர்கள். அந்நபரின் மன வேதனைகளை உள்வாங்கிக்கொண்டு, மனவேதனையை குறைக்க முயலவேண்டும். ‘நீ தனி ஆள் இல்லை, நான் உன்னுடன் இருக்கிறேன், இருப்பேன்’ என பேசி அவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அந்நேரத்தில் தற்கொலை செய்பவரின் மனக்குமுறல் வெளிப்படும். பின்னர் அதிலிருந்து அவரை மீட்டு விடலாம்.