பிரசவத்திற்கு பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டிய பாரம் பாரிய மருந்துகள்

மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் பாரம்பரிய மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அது தவறானதாகும். மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும்.

பின்பு 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும். 2ஆம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இள வறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.

3ஆம் நாளில் 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்க வேண்டும். 5ஆம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும்.

இம் மருந்து சூதக வாயுவை நீக்கும். 9ஆம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும். 11ஆம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.

13-ம் நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.

15-ம் நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும்.