ஈழத்துக் குரலிசைக் கலைஞன் பாடகர் அருள் தர்சன்

ஈழத்துக் கலைத்துறை வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்துறைசார் கலைஞர்களில் சிறந்ததொரு பாடகராக நன்கு அறியப்பட்டவர் பாடகர் அருள் தர்சன். எல்லா வகையான பாடல்களையும் பாடக்கூடிய வல்லமை கொண்டவர் இவராவார்.

சிறுவயது முதலே பாடல்களைப் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய தாய் மாமனான மகிமைநாதன் எனும் சிறந்ததொரு பேஸ் கிற்றார் வாத்தியக் கலைஞரின் உந்துதல் காரணமாகவே சிறுவயது முதலே இசை நிகழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வதாயும், அதன் மூலமாகவே பாடவேண்டும் என்கிற எண்ணம் தன்னுள் வந்ததாகவும் கூறுகின்றார்.

அருணா இசைக்குழுவின் முன்னாள் வாத்தியக் கலைஞரான தனது மாமாவே தன்னுடைய இசைத்துறை ஆரம்பத்திற்கு வித்திட்டவர் என்பதையும் தர்சன் கூறுகிறார்.

யாழின் அநேக கலைஞர்களின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய திருமறைக் கலாமன்றம் இவரின் இசைப் பயணத்திலும் பாரிய பங்காற்றியிருக்கின்றது. இவருடைய பன்னிரண்டு வயதில் திருமறைக் கலாமன்ற இசையமைப்பாளர் அற்புதராஜின் இசையமைப்பில், சொந்தப்பாடல் ஒன்றினை மேடையில் பாட ஆரம்பித்த இவர், 2003இல் முதன் முதலாக மேடையில் பாட ஆரம்பித்தார்.

இசையமைப்பாளர் வின்சனின் இசையில், முதன் முதலாகப் பாடலைப் பாடிய இவர் 2004இல் இசையமைப்பாளர் சுதர்சனின் யாழ் வருகையின் பின் இசைத்துறை சார்ந்து மிக வேகமாக இயங்கத் தொடங்கினார்.

2004இல் சுதர்சனின் ஜேம்ஸ் இசைக்குழுவில் பாடகராக பாடிக்கொண்டே சுதர்சனின் இசைப் பாடல்களையும் பாடத் தொடங்கினார்.

2005ஆம் ஆண்டில் நல்லூர் ராகம்ஸ் இசைக்குழுவின் பாடகராக இணைந்ததன் பின் தாயகத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகராக தர்சன் மிளிரத் தொடங்கினார். 2015 தொடக்கம் 2018 வரை புலம்பெயர் தேசம் செல்லும் வரை ராகம்ஸ் இசைக்குழுப் படகராக அங்கம் வகித்துக் கொண்டு தாயகத்தின் அனைத்து இசைக் குழுக்களிலும் தொடர்ச்சியாக பாடி வந்தார்.

ஒளிப்பதிவில் பாடல் பாடுதல், என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், மிக அசாத்திய திறனோடு பாடக்கூடிய ஒரு சிறந்த பாடகன் என்று இவரை சொல்ல முடியும். வார்த்தைகளின் தெளிவு, மெட்டினை உள்வாங்கும் திறன் என இவரை பயன்படுத்துதல் மிகச் சுலபம் என்பதனால், 2014, 2015 களில் தாயகத்தின் அநேக இசையமைப்பாளார்களின் இசையில் பல பெயர் சொல்லும் பாடல்களை தர்சன் பாடியுள்ளர்.

இலங்கையின் அரச இசை விருது விழாவில் மூன்று முறை சிறந்த பாடகருக்கான, தேசிய விருதினையும் இவர் பெற்றிருக்கின்றார். 2015இல் இசையமைப்பாளர் பிரசாத் இசையிலும், ஜோன்சனின் வரிகளிலும் அமைந்த ‘திட்டா திட்டும் பூவே’ என்ற பாடலிற்கும், 2015இல் இசையமைப்பாளார் சுதர்சனின் இசையில் உருவான ‘உண்மைக் காதல்’ என்ற பாடலிற்கும் 2012 இல் வெளியான சுதர்சனின் இசைப் படலான, ‘காளையன்’ பாடலிற்குமாக இவர் 3 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கின்றார்.

சிறு வயது முதலாக, தன்னுடைய இசைப் பயணத்தில் மிக முக்கியமான ஒருவராக இசையமைப்பாளர் சுதர்சனை குறிப்பிடும் தர்சன் தான் அவருடைய இசையில் பாடிய பல பாடல்களையும், அந்தக் காலத்தையும் மறக்க முடியாதென நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்.

2014ஆம் ஆண்டில் சக்தி தொலைக்காட்சி நடாத்திய ‘மண்வாசனை’ பாடல் போட்டி நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளார்களோடு கலந்துகொண்டு முதலிடத்தையும் இவர் பெற்றிருக்கின்றார். சக கலைஞர்களை மதிக்கின்ற பண்பும், எல்லோருடனும் சகஜமாகப் பழகுகின்றதனித் தன்மையும் இவரை பல்லிடங்களிலும் அறிய வைத்தது.

நாட்டின் பெரும்பாலான, தொலைக்காட்சி, வானொலிகள் என்பவற்றின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட தர்சன் தன்னுடைய அற்புதக் குரல் மூலம் பாடி வெளியீடு செய்த கவர் சோங்ஸ் பல உலகளாவிய ரீதியில் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தன.

2012இல் பிரான்ஸ் மண்ணிற்கு குடிபெயர்ந்த தர்சன் இன்று அங்கும் பல இசைக்குழுக்களின் பல இசை நிகழ்வுகளில் நல்ல பாடல்களைப் பாடி பிரான்ஸ் மண்ணிலும் தன்னை நல்லதொரு பாடகராக முன்னிறுத்தி வருகின்றார்.

தன்னுடைய இளமைக்கால திருமறைக் கலாமன்ற நண்பர்களின் உந்துதலை எப்பவும் மறக்கமுடியாது என நன்றியோடு கூறும் அருள் தர்சன் இன்றைய காலத்து நம்பிக்கை தரும் ஒரு பாடகராக தேசங்கள் கடந்தும், முகிழ்ந்தும் வருகின்றார்.