இலங்கையில் மதுபான நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கியது யார்? உண்மையை வெளியிட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன

இலங்கையில் மதுபான நிலையங்களை திறக்க அரசாங்கமே அனுமதி வழங்கியதென துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஏற்றுக் கொண்டுள்ளார்.

மதுபான நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுவரையில் கிராமபுறங்களில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த மதுபானங்களை பருகி மக்கள் நோய்வாய்ப்படுவது பாரிய பிரச்சினையாகியுள்ளமையினால் மதுபான நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபான நிலையங்களை திறக்க முடியாது. அரசாங்கம் அனுமதி வழங்கி தான் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணமில்லை பணமில்லை என கூறுகின்றார்கள். எனினும் மதுபான நிலையங்களை திறந்தவுடன் வரிசையில் நின்று பெற்றுக் கொள்கின்றார்கள்.

சாப்பிட பணமில்லை 2000 ரூபாய் கொடுங்கள் 5000 ரூபாய் கொடுங்கள் என கூறுகின்றார்கள். எனினும் மதுபான நிலையங்களுக்கு முன்னால் குவிந்து கிடக்கின்றார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டன. இதனால் பெருந்தொகை மக்கள் ஒன்று கூடியமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.