இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது இஞ்சி. பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் இஞ்சி மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாந்தி, குமட்டல், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மார்னிங் சிக்னஸ் பிரச்னைக்கு தீர்வாக இருக்கிறது. செரிமான பிரச்னைகளை சீராக்குகிறது. இஞ்சியில் வைட்டமின் சி, துத்தநாகம், கரோட்டினாய்ட்ஸ், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீசு, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

வாரத்துக்கு ஒரு முறை இஞ்சி சாறு எடுத்து பருகி வந்தால் பல்வேறு நோய்கள் நம்மை நெருங்காது. கட்டை விரல் அளவு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி மசித்து, கசக்கி 200 மி.லி தண்ணீரில் போட வேண்டும். 10 – 15 நிமிடங்கள் அப்படியே வைத்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டும். இந்த சாரை நிதானமாக சுவைத்து அருந்த வேண்டும். இஞ்சிக்கு பதில் சுக்கை கூட தோல் நீக்கி, இடித்து தண்ணீரில் போட்டு அருந்தலாம். இஞ்சி சாற்றுடன் பூண்டு, தேன் சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பு கரையும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாரத்துக்கு ஒரு முறை என தொடர்ந்து இஞ்சி சாறு அருந்தி வந்தால் மூளை செயல்திறன் மேம்படும். நரம்பு மண்டலம் பாதுகாக்கப்படும். மறதி நோய்க்கான வாய்ப்பு குறையும். மூளை தொடர்பான பாதிப்புகள் வருவது குறையும்.

இஞ்சி ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து இதை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். குறிப்பாக எச்.பி.ஏ1.சி அளவை 10 சதவிகிதம் வரை குறைக்கிறது.

உடல் எடைக் குறைப்பில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 2 கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்து வந்தால் அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தால் மிக வேகமாக கொழுப்பு கரைகிறது. குறிப்பாக தொப்பை கரையும். அதிகப்படியான உடல் எடை, உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும்.

மூட்டுத் தேய்மானம் உள்ளிட்ட மூட்டு பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இஞ்சி குறைக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் நோயாளிகளுக்கு தினமும் 500 மைக்ரோ கிராம் முதல் 1 மி.கி அளவுக்கு இஞ்சியை மூன்று முதல் 12 வாரங்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. ஆய்வில் பலருக்கும் மூட்டு வலி குறைந்திருப்பது தெரியவந்தது.

மாதவிலக்கின் போது அதீத வலியால் அவதியும் பெண்கள் இஞ்சி சாற்றைத் தொடர்ந்து அருந்தி வந்தால் வலி குறையும். மாதவிலக்கு பிரச்னைகள் சீராகும்.

ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. இந்த எல்.டி.எல் தான் ரத்த நாளங்களில் படித்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்கள் ஒரு மாதத்துக்குத் தொடர்ந்து இஞ்சி சாற்றை அருந்தி வந்த பிறகு ரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கெட்ட கொழுப்பு அளவு மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பதைக் காணலாம்.