கடந்த 10 நாட்களில் யாழில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த (25 வயது) பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (60 வயது) பெண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (78 வயது) ஆண் ஒருவரும் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

மேலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த (83 வயது) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த (81 வயது) பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (82 வயது) பெண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 322ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.