மூன்றாவது கண்: சி.சி.டி.வி. வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

வீடுகளிலோ, அலுவலகங்களிலோ பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

நாம் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு தூங்கும்போதும் மூன்றாவது கண்ணாக திகழும் சி.சி.டி.வி. விழித்திருந்து நம்மை சுற்றி நடப்பதை எல்லாம் படம்பிடித்து, நம்மை பாதுகாக்கிறது. வீடுகளிலோ, அலுவலகங்களிலோ பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

– கட்டிடத்தின் அளவுக்கும், அமைப்பிற்கும் தக்கபடிதான் கண்காணிப்பு கேமரா கட்டமைப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்பட்டுள்ள டி.வி.ஆர். என்ற கருவியின் ஹார்டு டிஸ்கில்தான் கேமராவின் காட்சிகள் ஸ்டோர் செய்யப்படும். சில நாட்களுக்கான காட்சிகளை மட்டும் ஸ்டோர் செய்தால் போதும் என்றால் குறைந்த அளவு ஸ்டோரேஜ் கொண்ட ஹார்டு டிஸ்க் போதுமானது. அதிக நாட்கள் ஸ்டோர் செய்ய விரும்புகிறவர்களுக்கு அதற்கு ஏற்ற ஸ்டோரேஜ் கொண்ட ஹார்டு டிஸ்க் தேவைப்படும்.

– கண்காணிப்பு கேமராக்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு பொருத்தமானவற்றை நிதானமாக ஆராய்ந்து தேர்வுசெய்யுங்கள்.

– குறிப்பிட்ட கோணத்தில் வைடு வியூ கிடைக்க டோம் கேமரா பயன்படுத்தலாம். குறிப்பிட்ட பகுதியில் உள்ள காட்சியை ஜூம் செய்து பார்க்கும் விதத்திலான கேமராக்களும் உள்ளன.

– இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும் சூழலிலும் தெளிவாக காட்சிகளை பதிவுசெய்ய ஸ்பெஷல் சி.சி.டி.வி. கேமராக்கள் தேவை.

– அதிக மெகாபிக்‌ஷலும், தெளிவாக காட்சிகளையும் தரும் கேமராக்களையே வாங்குங்கள். இப்போதைக்கு இது போதும் என்ற மனநிலையில் ஏதாவது ஒன்றை வாங்கிவிடவேண்டாம். எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமானால் ஒரு மெகாபிக்‌ஷல் சி.சி.டி.வி. கேமராவை பயன்படுத்தி சிறிது தூரத்தில் நிற்கும் வாகனத்தின் எண்களை காண முடிவதில்லை. இருட்டும் மழையும் இருந்தால் வாகனத்தை கூட சரியாக காணமுடியாது. ஆனால் பிக்‌ஷல் அதிகம்கொண்ட `டே அன்ட் நைட்’ கேமரா என்றால் காட்சிகளை தெளிவாக காணஇயலும்.

– கிளவுட் ஸ்டோரேஜ் கட்டமைப்பைக் கொண்ட சி.சி.டி.வி. சிஸ்டமும் கடைகளில் கிடைக்கும். வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவர்கள் சி.சி.டி.வி. சிஸ்டத்தை உடைக்கவோ, திருடவோ செய்தாலும் இன்டர்நெட்டில் குறிப்பிட்ட சர்வீசில் லாக் இன் செய்தால் ஆப் ஆக்கி வைத்திருந்த காட்சிகளும் கிடைத்துவிடும்.

– சி.சி.டி.வி.யில் மோஷன் டிட்டக்‌ஷன் மற்றும் சைரன் உள்ளதும் கிடைக்கிறது. இந்த வகை கேமரா முன்பு ஒருவரின் நடமாட்டம் இருந்தால் அலாரம் ஒலிக்கும். செல்போன் ஆப்ளிகேஷனில் நோட்டிபிகேஷனும் கிடைக்கும்.

– வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் கேமரா வாட்டர் புரூப் ஆக இருக்கவேண்டும். வியூவிங் ஆங்கிளிலும் சிறந்ததாக இருப்பது அவசியம்.

– ஐபி சி.சி.டி.வி.யை வாங்கிப் பொருத்துவது நல்லது. அதனை இன்டர்நெட்டுடன் இணைத்து வீடு, அலுவலகம், சுற்றுப்பகுதி போன்றவைகளை செல் போனிலே லைவ்வாக பார்க்கலாம். அதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் ஸ்பீடு மிக முக்கியம். அப்லோடு ஸ்பீடு குறைந்தது 5 எம்.பி.பி.எஸ்-க்கு மேல் இருக்கும் இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவைப்படும்.

– சி.சி.டி.வி. சிஸ்டம் அக்கவுண்ட் கிரியேட் செய்யும்போது கொடுக்கப்படும் மெயில் ஐ.டி. உங்களுடையதுதானா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். டெக்னீஷியனின் அக்கவுண்டுக்கு அதனை செட் செய்துவிட்டால், உங்கள் வீட்டு காட்சிகளை அவர் பார்த்து தவறாக பயன்படுத்திவிட முடியும். டெக்னீஷியன் செட் செய்து தரும் யூசர் நேம், பாஸ்வேர்டு போன்றவைகளை அவர்கள் சென்றதும் நீங்கள் மாற்றிவிட்டு, புதிதாக பதிவுசெய்துகொள்ளுங்கள்.