யாழ்ப்பாணத்தில் பொலிஸார், இராணுவம் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையல் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில் அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.