காளான் குழம்பு- சுவையாக செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி உண்ண சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த காளான் குழம்பை எவ்வாறு கறிக்குழம்பின் சுவையில் சமைப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

காளான் – கால் கிலோ, வெங்காயம் –1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 3, சோம்பு – 1 ஸ்பூன், துருவிய தேங்காய் – 3 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தனியா – 3 ஸ்பூன், வரமிளகாய் – 2, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல், கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.

செய்முறை

முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தினை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் தனியா, வரமிளகாய், சீரகம், மிளகு, இவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் இஞ்சி, பூண்டு இவற்றையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அதன் பின் இவற்றை நன்றாக ஆறவைத்து இவற்றுடன் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து, இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின், ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு என ஒவ்வொன்றையும் சேர்த்து தாளித்து, பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் காளானை சேர்த்து ஒருமுறை நன்றாக வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் இதனுடன் சேர்த்து ஒருமுறை கிளறி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடங்கள் சிறிய தீயில் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இவற்றிற்கு தேவையான உப்பு சேர்த்து, இறுதியாக கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான காளான் குழம்பு தயாராகிவிட்டது. இவ்வாறு மசாலாவுடன் சேர்த்து ஒருமுறை காளான் குழம்பை செய்து பாருங்கள். இதன் சுவை அப்படியே கறி குழம்பை சுவைப்பது போல் இருக்கும். நீங்கள் எவ்வளவு சாதம் கொடுத்தாலும் குழந்தைகள் மீண்டும் வேண்டுமென்று விருப்பமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.