மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடும் போது தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டும்.

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் பொது மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நடைபயிற்சி செல்வதற்கு பலர் வருகிறார்கள். அவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.

நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதால் மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்காது. இருப்பினும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் போலீஸ் சார்பில் தொடர்ந்து அறிவுரை அளிக்கப்பட்டு வருகிறது.

மெரினாவில் பொது மக்கள் செல்ல போலீசார் அனுமதிக்கமாட்டார்கள்.

கொரோனா தொற்று அதிகரிப்பதை கண்டு பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு எங்கிருந்து அதிகமாக பரவுகிறது என்று ஆய்வு செய்தோம். இது விழாக்கால சீசன்.

இதனை கருத்தில் கொண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் வீட்டிலேயே தங்களது விழாக்களை நடத்திக் கொள்ள வேண்டும்.

நிறைய பேர் நெரிசலான பகுதிகளில் அதிக அளவில் கூடுகிறார்கள். இதனால் கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.

மார்க்கெட்டுகள், திருமண நிகழ்ச்சிகள், கோவில்களில் மக்கள் கூடும்போது மிகுந்த உஷாராக இருக்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடும் போது தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டும்.

விசே‌ஷ நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.