நீங்கள் திருமணத்திற்கு தயாரா??

இரு மனங்கள் இணைந்து இறுதி வரை செல்லும் புனிதமிக்க பயணமே திருமணமாகும். காதல் ஒரு சிறந்த உணர்வு என்றால் காதலிப்பவரை திருமணம் செய்வது அதனினும் சிறந்த உணர்வு. மணம் முடிக்கும் அனைவரும் இறுதிவரை இணைந்து வாழ உறுதிப்பூண்டே கை கோர்க்கின்றனர். வாழ்வின் மிக முக்கிய முடிவு அதுவே.

திருமணம் செய்யும் முன் நம்மிடம் நாம் சில கேள்விகள் கேட்க வேண்டும். சரியான காலம் கனிந்துள்ளதா? மனவாழ்க்கை மேற்கொள்ளும் வலிமை உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை நம்மிடம் நாம் கேட்கவேண்டும். மேற்கூறிய வலிமையில் மனவலிமை, பொருள் வலிமை என இரண்டும் அடங்கும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டு கண்மூடித்தனமான முடிவுகளை எடுத்தால் பிற்காலத்தில் பல இழப்புகளை சந்திக்க நேரலாம். அப்போது யாரும் சொர்க்கத்தை குறை கூற மாட்டார்கள்; உங்களைத் தான் குறை கூறுவார்கள். மற்றவர்கள் குறை கூறினாலும் பரவாயில்லை; உங்கள் நெஞ்சமே குற்ற உணர்வில் கொந்தளிக்கும்.

இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க கீழ்கண்ட கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக்கொண்டு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

குடும்ப பொறுப்புகளை சுமக்க தயாரா?

கவலையின்றி சுற்றித் திரிபவர்களே! திருமணத்திற்கு பிறகும் அப்படி இருக்க முடியும் என்று நினைத்தால் அது கனவில் தான் நடக்கும். ஒரு வீட்டையே சுமக்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் துணையை கண்மணி போல பாதுகாக்க வேண்டும். உங்கள் துணையின் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் தயாரா?

வரவு எட்டணா… செலவு பத்தணா?

மனதார காதிலிப்பது மட்டும் போதாது. மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க தேவையான பணம் வேண்டும். சொந்தக்காலில் நிற்பவருக்கே திருமணம் செய்யும் தகுதி உண்டு. காசு விஷயத்தில் துணையை நம்பி இருப்பது தலை மேல் கத்தியை தொங்க விடுவது போல.

உங்களை நேசிக்கிறீர்களா?

பிறரை விரும்பும் முன் உங்களை விரும்புங்கள். உங்களிடம் அன்பு இருந்தால் தான் பிறருடன் பகிர முடியும். தம்மை நேசிக்க முடியாதவர் பிறரை நேசிக்க தெரியாதவர் ஆகிறார்.

காதலில் விழுந்துவிட்டீர்களா?

சமூக நெருக்கடி, குடும்ப நெருக்கடி காரணமாக நடக்கும் திருமணங்களில் வெறுப்பு தான் மிஞ்சும். எது இருந்தும் காதல் இல்லையேல் திருமணம் நிலைத்து நிற்காது. திருமணம் எனும் வாகனத்திற்கு அன்பு தான் பெட்ரோல்!

கடந்த கால கசப்புகள் இன்னும் வருத்துகிறதா?

பழைய காதலை மறப்பது கடினம் தான். அதனை கடக்காமல் வேறொரு திருமணம் செய்வது விபரீதத்தில் முடியும். உங்கள் துணையிடம் நீங்கள் அன்பு செலுத்த முடியாமல் போய்விடும்; மணவாழ்க்கை கசந்துவிடும். கடந்த கால சுமைகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே புதிய வாழ்க்கையை இனியதாக தொடங்க முடியும்.