12 முதல் 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி- இங்கிலாந்து அனுமதி… வெளியான தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறுகிறது.

ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமியரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது. ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.