கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் என்ன பிரச்சனை வரும்?

தற்போது கொரோனாவின் தாக்கத்தால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, இந்த கொடிய தொற்றுநோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொடிய வைரஸுக்கு எதிராக போராடத் தேவையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால் அந்த தடுப்பூசியை போட்ட பிறகு ஒருசில பக்கவிளைவுகளை அனுபவிப்பது சாதாரணமானது தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசியால் பக்கவிளைவுகளை சந்திப்பதற்கு காரணம், அந்த ஊசியில் உள்ள மருந்து உடலில் கிருமிகளை எதிர்க்கத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

மேலும் தடுப்பூசியால் சந்திக்கும் பெரும்பாலான அறிகுறிகள் 2-3 நாட்களுக்குப் பிறகு தானாகவே போய்விடும் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கீழே கோவிட்-19 தடுப்பூசியின் சில பொதுவான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குளிர் மற்றும் காய்ச்சல்

கோவிட்-19 தடுப்பூசியின் பொதுவான பக்கவிளைவு தான் குளிர் மற்றும் நடுக்கங்களுடன் காய்ச்சல். தடுப்பூசி போட்ட பிறகு, சிலருக்கு உடல் வெப்பநிலை அதிகரிக்கலாம். அதுவும் உடல் வெப்பநிலையானது 100 டிகிரி F-க்கும் அதிகமாகலாம் மற்றும் இந்த காய்ச்சல் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடித்திருக்கலாம்.

சோர்வு/களைப்பு

கொரோனா தடுப்பூசியால் அனுபவிக்கும் மற்றொரு அறிகுறி உடல் சோர்வு/களைப்பு. இந்த அறிகுறி தடுப்பூசி உடலில் சிறப்பாக வேலை செய்கிறது என்பதைக் குறிக்கிறது. இத்தகைய சோர்வு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை இருக்கலாம். இந்த அறிகுறியை சந்திப்பவர்கள் போதுமான நீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

தலைவலி

கோவிட்-19 தடுப்பூசியில் கொரோனா வைரஸின் ஆன்டிஜென்கள் உள்ளன. இவை கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க உடலுக்கு உதவுகின்றன.

இதன் காரணமாக, தடுப்பூசியின் பெரும்பாலான பக்கவிளைவுகள் கொரோனாவின் அறிகுறியுடன் ஒத்திருக்கின்றன. அதில் கொரோனா தடுப்பூசியின் ஒரு பொதுவான அறிகுறியாக தலைவலி இருக்கலாம். எனவே பலர் இது கொரோனா அறிகுறி என்று தவறாக நினைக்கக்கூடும்.

 குமட்டல்

கொரோனா தடுப்பூசியால் காய்ச்சல், குளிர் மற்றும் சோர்வு ஆகியவற்றுடன் சிலர் குமட்டல் உணர்வையும் உணரலாம். அதுவும் தடுப்பூசி போட்ட பின் வாந்தி வருவது போன்ற உணர்வை பலர் உணரலாம்.

ஆனால் இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும். மூட்டு வலி உடல் வலி மற்றும் மூட்டு வலி ஆகியவை கொரோனா தடுப்பூசியின் பெரும்பாலான பக்கவிளைவுகளாகும். சிலர் மூட்டு பகுதி மரத்துப் போவதையும், வீக்கத்தையும் அனுபவிக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடமே அதிகம் காணப்படுகிறது.

கை வீக்கம்

தடுப்பூசி போட்ட பின், ஊசி போட்ட இடமானது சிவந்தோ, வீங்கியோ போகலாம். அதோடு இது சிறிது அசௌகரியத்தையும் உண்டாக்கலாம். ஆனால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சரியாகிவிடும்.

ஊசிப் போட்ட கையை அடிக்கடி அசைப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசியின் அறிகுறிகளை எவ்வாறு சமாளிப்பது?

கொரோனா தடுப்பூசி போட்ட பின், அன்றாட பணிகளை செய்ய முடியாத அளவில் வலியை சந்தித்தால், மருத்துவரை அணுகி பேசுங்கள். உங்கள் மருத்துவர் உங்களுக்கு இப்யூபுரூஃபன், அசிடமினோபன், ஆஸ்பிரின் அல்லது ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

ஆனால் எக்காரணம் கொண்டும் சுயமாக எந்த மருந்தையும் எடுக்காதீர்கள். ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க, சுத்தமான, குளிர்ந்த அல்லது ஈரமான துணியைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுங்கள் மற்றும் சில கை பயிற்சிகளை செய்யுங்கள். உடல் வெப்பநிலையைக் குறைக்க உடலை நீரேத்துடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

முடிவு

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பக்கவிளைவுகளை அனுபவிப்பது சாதாரணம் தான். மேலும் இந்த பக்கவிளைவுகள் 2-3 நாட்களுக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.

ஒருவேளை ஊசிப் போட்ட இடத்தில் மிகவும் அதிகமாக சிவந்து சீழ் கட்டினாலோ அல்லது 2 நாட்களாகியும் சரியாவது போல் தெரியாவிட்டாலோ, மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக தடுப்பூசி போடுவது உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க நீங்கள் செய்யும் ஒரு சிறப்பான விஷயம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.