உலகிலே இந்த நாட்டில் தான் கொரோனா தடுப்பூசி விலை அதிகமாம்! எவ்வளவு தெரியுமா?

உலகிலே கொரோனா தடுப்பூசிக்காக எந்த ஒரு நாடும் பணம் பெறாமல் இருக்கும் நிலையில், இந்தியாவில் தான் தடுப்பூசிக்கு பணம் பெறப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவ துவங்கியது. இதையடுத்து அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மத்திய அரசு 150 ரூபாய்க்கு வாங்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியது. இதில் சேவை கட்டணமாக100 கூடுதலாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன்படி தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு ஒருடோஸ் 600 ரூபாய் என சீரம் நிறுவனமும், கோவாக்சின் ஒரு டோஸ் 1200 ரூபாய் என பாரத் பயோடெக் நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து தற்போது முன்னணி தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டுக்கு 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையிலும் கோவாக்சினுக்கு 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட 6 மடங்கு அதிக விலையை மக்கள் தர வேண்டி உள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகங்கள் கூறுகையில், ஜிஎஸ்டி, போக்குவரத்து, சேமிப்பு செலவு சேர்த்து கோவிஷீல்டு விலை 660 ரூபாயில் இருந்து 670 ஆகி விடுகிறது.

5 முதல் 6 சதவீதம் மருந்துகள் வீணாகின்றன. தடுப்பூசி போடும் ஊழியர்களுக்க பிபிஇ கிட், மருத்துவ கழிவு அகற்றும் செலவு சேர்த்து 170 முதல் 180 ரூபாய் ஆகிறது. இதன் காரணமாகவே 900 ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளது என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழக்கப்பட்ட பிறகு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஊரடங்கு போன்ற காரணத்தினால் மக்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது இந்த தடுப்பூசி விலை உயர்வு பெரும் வேதனையை கொடுத்துள்ளது.. மேலும், கொரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு விற்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.