2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை…

வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்றது.

டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது.

கேப்டன் கருணரத்னே 118 ரன்னும், லஹிரு திரிமானே 140 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னும், டிக்வெலா 77 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தமிம் இக்பால் 92 ரன்னும், மொமினுல் ஹக் 49 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 40 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரமா 6 விக்கெட்டும், லக்மல், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாலோ ஆன் கொடுக்காத இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கருணரத்னே 66 ரன்னும், தனஞ்செய டி சில்வா 41 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்லாம்5 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், 227 ரன்களில் ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 40 ரன்னும், மெஹிதி ஹசன் 39 ரன்னும், சாய்ப் ஹசன் 34 ரன்னும், மொமினுல் ஹக் 32 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரமா 5 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜெயவிக்ரமாவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது கேப்டன் திமுத் கருணரத்னேவுக்கு அளிக்கப்பட்டது.