11 பிடியாணைகளுடன் பொலிசாருக்கு தண்ணிகாட்டிய நபர்!

யாழில் இரண்டு திறந்த பிடியாணை உட்பட 11 நீதிமன்ற பிடியாணை இருந்த நிலையில் பொலிஸாருக்கு தண்ணிகாட்டிவந்த நபரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்று கையும்களவுமாகக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபருக்கு எதிராகப் பாரிய குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அவர் வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றங்களால் 11 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், அதில் 2 திறந்த பிடியாணைகளும் வழங்கப்பட்டிருந்தன.

குறித்த நபரைக் கைது செய்வதற்கு யாழ். மாவட்ட பொலிஸ் நிலையப் பொலிஸார் முயன்றபோதும் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேக நபரை யாழ். கொட்டடிப் பகுதியில் வைத்து நேற்று மாலை பொலிஸார் கைதுசெய்தனர்.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.