கழிப்பறையில் சிக்கிய 17 கிலோ தங்கம்..!!

சர்வதேச தங்கக் கடத்தல் மோசடி ஒன்று இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரூ .220 மில்லியன் மதிப்புள்ள 17 கிலோ தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அத்துடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பணியாற்றிய ஒரு காவலாளி கைது செய்யப்பட்டார்.

பயணி ஒருவர் விமான கழிப்பறையில் தங்கத்தை மறைத்து வைத்ததை தொடர்ந்து, மெருகூட்டல் இயந்திரத்தினால் அந்த இடத்தை மறைத்து வைத்துக் கொள்ள முயன்றதாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

தங்க பிஸ்கட்கள் பொலிதீனில் மூடப்பட்டு, கழிப்பறையின் வடிகால் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அது காவலாளியால் சேகரிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் காவலாளியை தடுத்து சோதனையிட்ட போது, 161 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டன.

அதன்பிறகு நேற்று காலை வருகை முனையத்தில் மற்றொரு கழிப்பறையிலிருந்து 1.5 கிலோ தங்க நகைகள் அடங்கிய மூன்று பொட்டலங்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் கைதான காவலாளி மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக் கடத்தல் முயற்சி இது என தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.