பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளைாயடும் ஆல்-ரவுண்டருமான அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 9ம் திகதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை-பெங்களுரு அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் 10ம் திகதி மும்பையில் நடக்கும் 2வது லீக் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், ஆல்-ரவுண்டரான அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது.

அக்சர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியை டெல்லி அணி தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது அக்சர் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அனைத்து வழிமுறைகளையும் அவர் பின்பற்றி வருவதாக டெல்லி அணி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணாவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது வீரர் அக்சர் பட்டேல் ஆவார்.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட ராணா கொல்கத்தா அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்சர் பட்டேல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்து வீசி அசத்தினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் காயமடைந்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இதனையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.