புதுச்சேரியை மாற்றுவோம்: பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி

‘‘புதுச்சேரியை தலை சிறந்த மாநிலமாக மாற்றுவோம். இதுதான் எனது தேர்தல் வாக்குறுதி’’ என்று பிரதமர் மோடி பேசினார். புதுச்சேரியில் ₹3,023 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை அர்ப்பணிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையம் வந்தார். மத்திய அமைச்சர்கள், கவர்னர், எம்பிக்கள், பாஜ, என்ஆர்.காங்கிரஸ், அதிமுக முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் பயணித்து ஜிப்மர் மருத்துவமனை வந்தார். அங்குள்ள கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய ₹2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம்- நாகப்பட்டினம் இடையிலான என்.எச்.45-ஏ நான்குவழி தேசிய நெடுஞ்சாலை, ஜிப்மர் காரைக்கால் கிளைக்கு புதிய வளாகம் கட்டுதல், புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட ₹3,023 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை காணொலி வாயிலாக மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘பயனாளிகளுக்கு நேரடியாக பணபரிமாற்றத்தை ஊக்கப்படுத்துவதில் புதுச்சேரி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்கள் புத்திசாலிகள். புதுச்சேரியின் முன்னேற்றத்துக்கு எனது அரசாலான அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்தத்தான் நான் இங்கு நேரடியாக வந்திருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது: புதுச்சேரியிலே நான் மிகப்பெரிய மகிழ்ச்சி, உற்சாகத்தை பார்க்கிறேன். இது காற்று மாறி வீசுவதை காட்டுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் தொடங்கப்பட்ட திட்டங்கள். இரண்டாவதாக காங்கிரஸ் அரசிமிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றது. இனி, தேஜ  கூட்டணி புதுச்சேரியின் மக்கள் சக்தியால் உந்தப்பட்டதாக இருக்கும் என  உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

ஜம்மு  காஷ்மீரில் கூட உள்ளாட்சி தேர்தல் நடந்தப்பட்டது. ஆனால், புதுச்சேரியில உள்ளாட்சி தேர்தலை காங்கிரஸ் அரசு நடத்தவில்லை. இந்த ஜனநாயக விரோத போக்கை மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள். இங்கு நீங்கள்தான் (மக்கள்) புதுச்சேரிக்கான என்னுடைய தேர்தல்  அறிக்கை. சில வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியும். நான் புதுச்சேரியை  சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். தேஜ கூட்டணி புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்ற  விரும்புகிறது. வர்த்தக மையமாக இருக்கும், கல்விக்கான கேந்திரமாக, ஆன்மீகத்தின் பெரும் மையமாகவும் இருக்கும். சுற்றுலா மையமாக இருக்கும். இதுதான்  புதுச்சேரிக்கான எனது தேர்தல் அறிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.