பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பயண நிகழ்ச்சி நிரல் தொடர்பான தகவல்களை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்க உள்ளார்.

அத்துடன், வரத்தக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர்மட்ட ஈடுபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பெப்ரவரி 23 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறும் பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இரு நாட்டு பிரதமர்களும் தலைமை தாங்குவார்கள்.

முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் இந்த விஜயத்தின் போது இணைந்திருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.