பிரதமர் இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, அவர் நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் கோவிட் – 19 வைரஸ் தொற்றின் புதிய ரக பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டே, பாகிஸ்தான் பிரதமரின் உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் எதிர்வரும் 22ஆம் திகதி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரை உரையாற்ற அனுமதிப்பது,இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசின் சில உறுப்பினர்கள் கருதியதால், இந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்ரான் கான் எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது