காதலனின் உயிரை எடுத்த கல்லூரி மாணவி….

காதலித்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற உறவினரை கொடூரமாக கொலை செய்து டீசல் ஊற்றி எரிந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலை ஓர புதரில் கடந்த வாரம் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்ததையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு ஆனந்தராஜ் (29) என தெரிந்தது. ஆனந்தராஜூம் இவரது உறவினர் பெண்ணான வடுகபட்டியை சேர்ந்த விஜயசாந்தி (19) என்பவரும் காதலித்து வந்தனர். விஜயசாந்தி பெரியகுளம் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஆனந்தராஜூக்கு அவரது அக்காள் மகளை திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது. காதலன் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விஜயசாந்தி, ஆனந்தராஜை கொல்ல திட்டமிட்டார்.

அவரது அக்காள் வித்யா (30) கொடுத்த ஆலோசனையின்படி, சம்பவத்தன்று ஆனந்தராஜை மேல்மங்கலம் வைகைபுதூர் சாலைக்கு வரச் சொல்லியுள்ளார். அங்கு விஜயசாந்தி, அவரது பெரியப்பா மகன் பிரபாகரன் (30) சேர்ந்து ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் சாலை ஓர புதரில் போட்டு டீசல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை விசாரணையில், விஜயசாந்தி மதுரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் பதுங்கி இருந்த மூன்று பேரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.