வீட்டில் அழுகிய நிலையில் பெண் காவலர்… 20 நாட்களாக சடலத்துடன் இருந்த குழந்தைகள்!

ஏசு கிறிஸ்துவைப் போல மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் 20 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த பெண் காவலரை அடக்கம் செய்யாமல் அவருடன் 2 குழந்தைகள் உட்பட பாதிரியார் மற்றும் காவலரின் சகோதரியும் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த அன்னை இந்திரா என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தேனியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 13 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இந்திரா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்துசென்றுள்ளார்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த காவலர் இந்திரா, பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவவிடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ம் திகதி அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது சகோதரி சகுந்தலா இவருடன் வந்து தங்கியுள்ளார். இத்தருணத்தில் விருப்ப ஓய்வுக்கான ஆணையை வழங்க வீட்டிற்கு வந்த பெண் காவலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பயங்கர துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் வந்து பார்த்த போது இந்திரா இறந்து 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அழுகிய அவரது உடலுடன் சகோதரி சகுந்தலா, மற்றும் இரண்டு குழந்தைகள் பாதிரியார் சுதர்சன் ஆகியோர் இருந்துள்ளனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திராவிற்கு மயக்கமாகிய நிலையில் இருந்த போது, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அது கடவுளுக்கு விரோதமான செயல் என்று கூறி இவ்வாறு வைத்துள்ளனர்.

இந்திரா மயக்கத்திலிருந்த 3 நாட்களில் அவரது உடல் துர்நாற்றம் வர ஆரம்பித்துள்ளது. தற்போது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அந்த வீட்டிலேயே உடற்கூறு ஆய்வு செய்து தற்போது உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தைகளுக்கு தாய் இறந்தது கூட தெரியாமல் ஓய்வில் இருக்கிறார் மீண்டும் உயிருடன் வருவார் என்று பாதிரியாருடன் ஜெபம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.