திடீரென மாயமாக மறைந்த பாலைவனத்தில் இருந்த உலோக தூண்!!

அமெரிக்காவில் உள்ள யூட்டா மாகாணத்தில் பாலைவன பகுதியில் கடந்த 18-ம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த உலோகம் நிறுவப்பட்டிருந்த பாலைவன பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் 12 அடி உயரம் கொண்ட சில்வர் உலோகத்திலான தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதன்பின்னர் இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியது.

பாலைவனத்தின் நடுவே உலோக தூண் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், உலக மக்களை பரபரப்பாகும் வகையில் மர்மமான முறையில் நிறுவப்பட்டிருந்த உலோக தூண் தற்போது மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. அந்த உலோக தூண் நேற்று இரவு மாயமாகியுள்ளது.

அந்த தூணை நாங்கள் நீக்கவில்லை என்றும் வேறு யாரோ எடுத்து சென்றது என்றும் கூறியுள்ள யூட்டா மாகாண நில மேலாண்மை அதிகாரிகள் உலோக தூணை வெட்டி எடுத்து சென்றது யார் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அந்த பாலைவனப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் இது குறித்து விசாரணை நடத்த ஊள்ளூர் போலீசார் முடிவு செய்துள்ளதாக யூட்டா நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.