சுந்தர் பிச்சையின் காதல் மனைவி பற்றி பல விடயம்

கூகுள் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர்பிச்சை.

கூகுளின் சி.இ.ஓ என்ற வகையில் அவர் படித்தது, வளர்ந்தது, வேலை பார்த்தது என அவருடடைய தொழில் முறை வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் ஆனால் சுந்தர் பிச்சையின் காதல் மனைவி அஞ்சலி பிச்சையைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம்.

அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் பிறந்தார். பெற்றோர் ஓலராம் ஹர்யானி அம்மா மாதுரி ஷர்மா. பள்ளிப்பருவம் முழுவதும் ராஜஸ்தானிலேயே கழித்தார். பின்னர் கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் கெமிக்கல் இஞ்ஜினியரிங் சேர்ந்தார். படிப்பை 1993 ஆம் ஆண்டு முடித்திருந்தாலும் 1990களிலேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

அஞ்சலி சுந்தரின் திருமணம் காதல் திருமணம். கல்லூரியில் துவங்கிய இவர்களது காதல் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் போது வகுப்புத் தோழியாக அறிமுகமாகியிருக்கிறார் அஞ்சலி. சுந்தருக்கு பார்த்ததுமே காதல் வந்துவிட்டதாம். அதன் பின்னர் இருவருமே நண்பர்களாக பழகத் துவங்கியிருக்கிறார்கள். நண்பர்களாக பழகும் காலங்களில் அடித்த லூட்டிகள் எல்லாம் ஏராளம் என்கிறார் சுந்தர்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, அஞ்சலியைப் பார்க்க அவர் தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்வாராம் சுந்தர் அங்கே ஃபிரண்ட் ஆபிஸில் இருப்பவரிடம் அஞ்சலியை அழைக்கச் சொன்னால் அவர், அஞ்சலி… சுந்தர் இங்கேயிருக்கிறான் உன்னைப் பார்க்க என்று கத்துவார். கேட்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்கின்றார் சுந்தர்பிச்சை.

ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் நட்பைத் தாண்டி ஓர் உணர்வு மேலோங்குவதை இருவருமே உணர்ந்திருந்தார்கள். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது சுந்தர் முதலில் தன் காதலை வெளிப்படுத்த அஞ்சலியும் உடனே ஒ.கே. சொல்லிவிட்டிருக்கிறார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும், சுந்தர் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா பறந்து விட்டார். அஞ்சலி இந்தியாவில் தங்க வேண்டிய சூழல், பொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுந்தர் நினைத்து தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார். அஞ்சலிக்கும் இங்கே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து பிஸியானார்.

செல்போன் அறிமுகமாகாத காலத்தில் நடந்த காதல் இது, அதுவும் காதலன் அமெரிக்காவில் காதலி இந்தியாவில் கிட்டதட்ட ஆறு மாதங்கள் வரை இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அதன்பின் எப்போதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என பேசுவார்களாம்.

பொருளாதார ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டு பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இந்திய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் முடிந்து அஞ்சலியும் அமெரிக்காவிற்கே சென்று விட்டார். தற்போது கிரண்,காவ்யா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அஞ்சலியை சுந்தர் மட்டுமல்ல அவரது உறவினர்கள் எல்லாரும் அதிர்ஷ்ட தேவதை என்றே வர்ணித்திருக்கிறார்கள். ஆம், சுந்தருக்கு மைக்ரோசாஃப்ட், யாகூ, டிவிட்டர் போன்ற பல நிறுவனங்களில் இருந்தும் வேலை கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். ஆனால் அஞ்சலி அவற்றையெல்லாம் நிராகரிக்கச் சொல்லியிருக்கிறார்.

கூகுளில் அழைக்க அஞ்சலி செல்ல சம்மதித்திருக்கிறார். இது நடந்தது 2004 ஆம் ஆண்டு. 2004ல் கூகுளில் பணியாற்றத்துவங்கிய சுந்தர் பிச்சை 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., வாக நியமிக்கப்பட்டார்.

தற்போது கலிஃபோர்னியாவில் இருக்கும் லாஸ் அல்டோஸ் ஹில்ஸ் என்னுமிடத்தில் ஆடம்பரமான பங்களாவில் வாழ்கிறார்கள் இந்த காதல் குடும்பம். இவர்களின் இந்த வீட்டினை வடிவமைத்தது புகழ்ப்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ராபர்ட் ஸ்வாட்.

இதேவேளை சுந்தர் பிச்சையின் மனைவி என்ற அடையாளத்தை விட தனக்கான தனி அடையாளத்தையும் பெற்று முத்திரை பதித்திருக்கிறார் அஞ்சலி பிச்சை.

காதலித்து கரம் பிடித்த கணவனுக்கு உறுதுணையாகவும், தன்னுடைய லட்சியத்தையும் அடைந்திருக்கும் அஞ்சலி தற்போது இண்டுயுட் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிஸ்னஸ் ஆப்ரேஷன் மேனேஜராக பணியாற்றுகிறார்.