ஸ்ரீலங்காவில் சீன பிரஜைகள் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி!

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு ஊழியர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு துறைமுக நகர் கட்டுமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடமொன்றில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தில் கொழும்பு 13 திட்டத்தின் பணியாளர்கள் மாத்திரமே தங்கி இருந்ததாகவும், கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் கொழும்பு போர்ட் சிட்டி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பின்னர் குறித்த கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் குறித்த பகுதிக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், குறித்த பகுதி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு போர்ட் சிட்டியின் முதன்மை திட்டத்தின் பணிகள் வழக்கம் போல் இடம்பெற்று வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.