தமிழக அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தியா முழுவதும் பரவலாக அதிகரித்து வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தடைகள் விதிக்கப்பட்டது. தற்போது தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மெல்ல மெல்ல கொரோனா கட்டுக்குள் வருகிறது. இதனையடுத்து மக்களுக்காக பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் திரைத்துறையை பொருத்தவரையில் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த பல கேள்விகளும் எழுந்துள்ளன. அவ்வப்போது திரைத் துறையைச் சார்ந்தவர்களும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, திரையரங்குகள் திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது , மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின்னரே திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். திரையரங்கு திறக்கப்படும் போது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனில் பாதிப்பு ஏற்படும் என இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அமைச்சர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த மாதம் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதனையடுத்து டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.